3 லாரிகளில் பதுக்கல்: மதுரையில் 10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது
மதுரையில் 3 லாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை திலகர்திடல் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது ரெயில்வே பார்சல் சர்வீஸ் அலுவலகம் அருகே 2 லாரிகளில் பெருமளவில் புகையிலை பொருட்கள், போதை பாக்கு பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த லாரிகளை சுற்றி வளைத்து பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த 2 லாரிகளிலும் 125 மூடைகளில் புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த லாரியில் இருந்த டிரைவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மேலஅனுப்பானடியை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 63), அவரது மகன் எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணி (35), என்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக வடக்குமாசி வீதியில் உள்ள லாரி ஷெட்களில் மேலும் புகையிலை பொருட்கள் அடங்கிய மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் 16 மூடைகளை கைப்பற்றினர்.
அந்த லாரி ஷெட்டுகளில் இருந்துதான் பல்வேறு ஊர்களுக்கு லாரி மூலம் மூடை, மூடையாக புகையிலை பொருட்கள் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த லாரி ஷெட் மேலாளர்கள் திடீர்நகரை சேர்ந்த பாலமுருகன் (24), பசுமலையை சேர்ந்த சூர்யபிரபாகர் (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பாரதியார் தெருவை சேர்ந்த பழனி(50), அவரது மகன் கார்த்திக் ஆகியோர் தான் பல்வேறு ஊர்களுக்கு சில்லறை விற்பனைக்காக லாரி மூலம் அந்த புகையிலை பொருட்களை அனுப்பி வைத்ததாக தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் டிரைவர்கள் துரைப்பாண்டி, பாலசுப்பிரமணி, லாரி செட் மேலாளர்கள் பாலமுருகன், சூர்யபிரபாகர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மொத்தம் 3 லாரிகளில் இருந்த சுமார் 10 டன் புகையிலை, பாக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தலைமறைவாக உள்ள பழனி, அவரது மகன் கார்த்திக் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த திலகர்திடல் போலீசார் மற்றும் தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
Related Tags :
Next Story