திருச்செங்கோடு நகராட்சி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவு - அமைச்சர் தங்கமணி தகவல்
திருச்செங்கோடு நகராட்சி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் வளர்ச்சி திட்ட பணிகளின், முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள், முதல்-அமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்ட பணிகள், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகள், பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாய கூடங்கள் கட்டும் பணிகள், அங்கன்வாடி மையம் கட்டும் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கெரோனா நோய் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் வகையில் சுகாதாரத்துறை, வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து தன்னலம் பார்க்காமல் கடந்த 8 மாத காலமாக களப்பணி நடவடிக்கை மேற்கொண்டதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து பகுதிகளிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் உடனடியாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நாமக்கல், மோகனூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி, கபிலர்மலை, நாமகிரிப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.18 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 152 குடிநீர்த்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்செங்கோடு நகராட்சி கூட்டுக்குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளன.
திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 669 குடியிருப்புகள் கட்டும் பணியும், ஆலாம்பாளையம், படைவீடு பேரூராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும் 80 சதவீதம் முடிவுற்று உள்ளன. அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி திட்டத்தின் கீழ் 78 நபர்களுக்கு ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 108 ஆம்புலன்சுகள் 23 எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மேலும் 2 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இவற்றையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா ராஜு, துணை தலைவர் பி.ஆர்.சுந்தரம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story