சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமையில் நடந்தது.
சேலம்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் சேலம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு குழு தலைவரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டர் ராமன், எம்.பி.க்கள் சந்திரசேகரன், சின்ராஜ், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கப்படும் நிதிகள் குறித்தும், அந்த நிதிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், மருதமுத்து, சின்னத்தம்பி, வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் ஒதுக்கப்படும் நிதிகள் தொடர்பாகவும், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சேலத்தில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வருகிறது. பூ மார்க்கெட்டை குத்தகை எடுத்து உள்ள நபர் போலியாக பில் தயாரித்து வியாபாரிகளிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூல் செய்து வருகிறார். வ.உ.சி. பூ மார்க்கெட்டில் சிறு, குறு வியாபாரிகள் தான் வியாபாரம் செய்யவேண்டும். ஆனால் அதற்கு மாறாக பல்வேறு வியாபாரிகள் உள்ளே புகுந்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. அவரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
தர்மபுரி, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதே போல் சேலத்திலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. எனவே, சேலம் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story