பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஊராட்சி வரவு-செலவு கணக்குகளை வீடு, வீடாக வழங்கும் ஊராட்சி தலைவர்
கருப்பம்புலம் ஊராட்சியின் வரவு- செலவு கணக்குகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நோட்டீசாக அச்சடித்து ஊராட்சி தலைவர் வீடு, வீடாக வழங்கி வருகிறார்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சி தலைவர் சுப்புராமன், தான் பதவியேற்றதில் இருந்து இன்று வரையில் 9 மாத வரவு- செலவு கணக்குகளை நோட்டீசாக அச்சடித்து ஊராட்சியில் உள்ள 1,640 வீடுகளுக்கும் வீடு, வீடாக சென்று வழங்கி வருகிறார். அதில் வரி வசூல் எவ்வளவு? மொத்த வரவு, இதுவரை செய்யப்பட்ட செலவு உள்பட அனைத்து விவரங்களும் அதில் இடம் பெற்று உள்ளது. மேலும் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிபவர்கள், வணிக வளாகங்கள், அங்காடிக்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்கும் இந்த நோட்டீசை வழங்கி வருகிறார்.
மேலும் தான் பதவியேற்ற பிறகு ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் பராமரிப்பு, குடிநீர் வினியோகம், மின்சார வினியோகம் ஆகியவை குறித்தும் அதில் அவர் கூறியுள்ளார். ஊராட்சியின் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்காகவும் வைத்துள்ளார்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுப்புராமன் கூறுகையில், ஊராட்சியில் நடக்கும் வரவு-செலவு கணக்குகளை ஊர் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஊராட்சி நிலவரம் மக்களுக்கு தெரிய வரும். ஆண்டுக்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கை தணிக்கை செய்தாலும் தற்போது மக்கள் தணிக்கைக்கு வரவு-செலவு கணக்குகளை நோட்டீசாக அச்சடித்து வினியோகம் செய்துள்ளேன் என்றார்.
இந்த ஊராட்சியின் வரவு-செலவு அறிக்கை சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகிறது. ஊராட்சி வரவு-செலவு கணக்குகளை மக்களுக்கு வெளியிட்ட கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் உறுப்பினர்களுக்கு அந்த ஊராட்சி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story