சின்னசேலம் அருகே, மின் வேலியில் சிக்கி விவசாயி பலி - தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியவர் கைது
சின்னசேலம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார். தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே வீரபயங்கரம் காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் முத்துசாமி(வயது 35) விவசாயி. இவர் வீரபயங்கரம் எல்லையில் தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகிறார். முத்துசாமியின் நிலத்தின் அருகே ஒய்வுபெற்ற வனத்துறை பணியாளருக்கு சொந்தமான நிலத்தை சேலம் மாவட்டம் கெங்கவல்லி காமக்காபாளையம் பகுதியை சேர்ந்த மணிவேல்(44) என்பவர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். காட்டுபன்றி, மான் ஆகியவை பயிரை சேதப்படுத்தியதால் மணிவேல் நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்து இருந்தார். இது தெரியாமல் முத்துசாமி நேற்று அதிகாலை அவரது நிலத்துக்கு சென்றபோது மின் வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் நிலத்தை பார்வையிட வந்த மணிவேல் மின்சாரம் தாக்கி முத்துசாமி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எங்கே நம்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ என்று அஞ்சிய அவர் முத்துசாமி தற்கொலை செய்து கொண்டதாக மக்களை நம்ப வைப்பதற்காக அவரது உடலை தூக்கிச்சென்று சகுந்தலாகுறிச்சி ஏரி கரையோரம் போட்டு விட்டு சென்றார். இது குறித்து முத்துசாமியின் மனைவி ஜீவாட்சி கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவுசெய்து மின்வேலி அமைத்த மணிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story