தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை


தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
x
தினத்தந்தி 5 Oct 2020 5:03 AM IST (Updated: 5 Oct 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பதிவான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த வியாபாரி செல்வன் (வயது 32). இவர் நிலத்தகராறு காரணமாக காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். திருமணவேலின் உறவினர்கள் முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இவர்கள் 4 பேரையும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு 4 பேரையும் அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விசாரணையின் அடிப்படையில் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 4 போலீசார் விசாரணைக்காக நேற்று அழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆவணங்கள் சேகரிப்பு

மேலும் செல்வன் காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டு உள்ளார். காரில் கடத்தப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து, கடத்தி சென்ற வாகனத்தை பிடிப்பதற்காக மாவட்டம் முழுவதும் போலீசை உஷார்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து பதிவான ஆவணங்களையும் சேகரித்தனர். இதன் அடிப்படையிலும் போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு

மேலும் கொலை சம்பவம் குறித்து கைதானவர்கள் சம்பவ இடத்தில் விளக்கி கூறுவதற்காக இன்று (திங்கட்கிழமை) தட்டார்மடத்துக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) 4 பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story