வில்லிவாக்கத்தில் ஓட ஓட விரட்டி வக்கீல் வெட்டிக்கொலை - 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


வில்லிவாக்கத்தில் ஓட ஓட விரட்டி வக்கீல் வெட்டிக்கொலை - 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Oct 2020 5:31 AM IST (Updated: 5 Oct 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில் ஓட ஓட விரட்டி வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர், சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாக இருந்து வந்தார். இவரது அலுவலகம் சென்னை பெரம்பூர் பட்டியல் சாலையில் உள்ளது. மேலும் இவர், மக்கள் ஆளும் அரசியல் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்தார். இவர் சென்னை எழும்பூர் கோர்ட்டில் பிரபல வக்கீல் ரஜினி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படுகிறது.

ராஜேஷ், நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே தள்ளி அரிவாளால் வெட்டினர். உடனே சுதாரித்துக்கொண்ட ராஜேஷ், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இந்த கொலை குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் ரஜினி கொலைக்கு பழிக்குப்பழியாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இவர் சமீபத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு நில பிரச்சினையில் தலையிட்டு பேசி வந்த நிலையில் அந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story