கோத்தகிரி அருகே புரோக்கருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது


கோத்தகிரி அருகே புரோக்கருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Oct 2020 8:01 AM IST (Updated: 5 Oct 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே புரோக்கரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேர்க்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 63). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதற்கு கப்பட்டி அருகே உள்ள குட்டிமணி காலனியில் வசிக்கும் நில புரோக்கரான மணிகண்டன்(48) என்பவர்தான் காரணம் என்று, அவருடன் பாண்டியன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமாக காக்காசோலையில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது அங்கு கூலி வேலை செய்து கொண்டு இருந்த பாண்டியன், அவரை கண்டு கோபம் அடைந்து தகராறில் ஈடுபட்டார். மேலும் இருவருக்கும் இடையே கைகலப்பானது.

இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் தனது கையில் இருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதனால் அவரது காது பகுதி மற்றும் முக பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார், முன்விரோதத்தில் நில புரோக்கரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியான பாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவர் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story