திருச்சி காந்திமார்க்கெட் அருகே சவ ஊர்வலத்தில் இரு தரப்பினர் திடீர் மோதல் போலீசார் குவிப்பு


திருச்சி காந்திமார்க்கெட் அருகே சவ ஊர்வலத்தில் இரு தரப்பினர் திடீர் மோதல் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2020 10:57 AM IST (Updated: 5 Oct 2020 10:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்திமார்க்கெட் அருகே சவ ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே நேற்று மாலை சவ ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த சமயம் மற்றொரு சவ ஊர்வலம் அதே வழியாக வந்தது. அப்போது இரு ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தை கண்டு அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காந்திமார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டனர்.

அப்போது ஒரு தரப்பினர் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் ரவி அபிராம், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதுகுறித்து முறைப்படி புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன் பிறகு அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனாலும் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.



Next Story