தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானை - பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்


தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானை - பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2020 11:07 AM IST (Updated: 5 Oct 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தது. கடும் ஆக்ரோஷத்துடன் ஊருக்குள் வந்த காட்டு யானையை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது கிராமத்தில் ஒரு வீட்டின் அருகில் விவசாயிகள் தக்காளி கூடைகளை மினி வேனில் எற்றிக் கொண்டிருந்தனர். இந்த யானையை பார்த்த விவசாயிகள் அங்கிருந்து ஓடினார்கள். இதையடுத்து அந்த யானை மினி வேனில் வைத்திருந்த தக்காளி கூடைகளை கீழே இழுத்து போட்டு அதை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது.

தொடர்ந்து அருகில் உள்ள வயல்வெளிகளில் புகுந்த காட்டுயானை அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, வாழை ஆகிய பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இது குறித்து கிராம மக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரகர் சுகுமார், வனவர் ஈஸ்வரன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அந்த காட்டு யானையை விரட்டினார்கள்.இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story