கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பாட்ட பயிற்சி - முதியவருக்கு கிராம மக்கள் பாராட்டு


கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பாட்ட பயிற்சி - முதியவருக்கு கிராம மக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 5 Oct 2020 11:11 AM IST (Updated: 5 Oct 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பாட்ட பயிற்சியை கற்று கொடுக்கும் முதியவரை கிராம மக்கள் பாராட்டினர்.

தர்மபுரி,

கொரோனா ஊரடங்கு அறிவித்து பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்பட பல்வேறு துறைகள் தற்காலிகமாக மூடப்பட்ட சூழலில் தற்போது ஊரடங்கு உத்தரவில் பல்வேறு துறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஒருபுறம் நடைபெற்றாலும் அரசு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதன் காரணமாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட கூடாது என்று தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கிராம பகுதியை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் (வயது 70) , பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களை ஒன்றிணைத்து அங்குள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்ட பயிற்சியை கடந்த 6 மாதமாக இலவசமாக அளித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து துறைகளும் முடங்கி கிடந்த சூழலில் மாணவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கவும், தான் சிறுவயதில் கற்று தேர்ந்த சிலம்பாட்ட பயிற்சியை தங்கள் கிராமத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு கற்று கொடுத்து வருகிறார் அந்த முதியவர்.

அதன் பயனாக 5 முதல் 30 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சிலம்பாட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். தொடக்கத்தில் 10 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த நிலையில் தற்போது 80 மாணவர்கள் வரை சிலம்பாட்ட பயிற்சி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மனஇறுக்கம் நீங்கி புத்துணர்வு பெற்று தசைகள் வலிமை பெற்று மற்றவர்களிடம் இருந்து தங்களை தன்னம்பிக்கையுடன் தற்காத்து கொள்ள பெரும் பயனுள்ளதாக இருப்பதாக சிலம்பாட்ட பயிற்சி பயின்றுவரும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் நலன்காக்க சிலம்பாட்ட பயிற்சியை இளைய தலைமுறையினருக்கு அளிப்பதை பெருமையாக இருக்கிறது என்று 70 வயது முதியவர் கிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அறிந்த பல்வேறு கிராமங்களில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் இந்த சிலம்பாட்ட பயிற்சியில் சேர்க்க தொடங்கியுள்ளனர். இந்த முதியவருக்கு பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story