குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீர் வெளியேற்றம் அமைச்சர் கந்தசாமி நடவடிக்கை


குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீர் வெளியேற்றம் அமைச்சர் கந்தசாமி நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2020 10:17 PM GMT (Updated: 5 Oct 2020 10:17 PM GMT)

கிருமாம்பாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற அமைச்சர் கந்தசாமி நடவடிக்கை எடுத்தார்.

பாகூர்,

கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இடி யுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, கிருமாம்பாக்கம் சிந்தாமணி நகரில் மழைநீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதியில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி நேற்று காலை சிந்தாமணி நகருக்கு சென்று ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் மழை நீரை வெளியேற்றவும், தொடர்ந்து இந்த பகுதியில் மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அந்த பகுதி மக்கள் அமைச்சர் கந்தசாமியிடம் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆய்வின்போது பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சாய் சுப்பிரமணியன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், உதவி பொறியாளர் சிவபாலன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கர், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story