சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.2½ கோடி அபராதம் வசூல் அமைச்சர் தகவல்


சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.2½ கோடி அபராதம் வசூல் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2020 10:58 PM GMT (Updated: 5 Oct 2020 10:58 PM GMT)

சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத தனி நபர்கள், வணிக நிறுவனங்களிடம் ரூ.2½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சென்னை,

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

சட்ட நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெரினா கடற்கரையில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் கடற்கரை பகுதி மாநகராட்சியின் சார்பில் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு விஞ்ஞான முறையில் எரியூட்டப்படுகின்றன.

அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றாத தனிநபர்களிடம் இருந்து அபராதம், நிறுவனங்களின் மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.2½ கோடி அபராதம் வசூல்

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 1-4-2020 முதல் 3-10-2020 வரை ரூ.2 கோடியே 40 லட்சத்து 86 ஆயிரத்து 9 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கலந்துகொண்டவர்கள்

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, பேரூராட்சிகள் இயக்குனர் எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குனர் த.பிரபுசங்கர் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story