கழிவுநீரால் குடிநீர் மாசடைவதாக புகார்: இறால் பண்ணைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கழிவுநீரால் குடிநீர் மாசடைவதாக புகார்: இறால் பண்ணைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Oct 2020 11:04 PM GMT (Updated: 5 Oct 2020 11:04 PM GMT)

இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் குடிநீர் மாசடைவதாக கூறி பொதுமக்கள் பொன்னேரி-பழவேற் காடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் போராட்டம் நடத்தியதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் ஊராட்சி பகுதிகளில் காஞ்சிவாயல், திருப்பாலைவனம் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இங்கு உள்ள விளைநிலங்களில் 100- க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இறால் பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால் மற்றும் வண்ணமீன்களுக்கு ரசாயன மருந்துகள் தீவனமாக வழங்கப்படுகிறது.

இதனால் பண்ணைகளில் உள்ள நீர் மாசடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இறால் பண்ணைகளின் கழிவுநீர் வெளியேற்றும் போது துர்நாற்றம் அடிக்கிறது.

இதனால் சுற்றுபுறத்தூய்மை கெடுவதுடன் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காஞ்சிவாயல் கிராமத்திலிருந்து தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீரில் ரசாயனம் கலந்த கழிவுநீர் கலந்து மாசடைந்து காணப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் குடிநீரை குடிக்க முடியாத அளவிற்கு உப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் நேற்று திருப்பாலைவனம் கிராமத்தின் வழியாக செல்லும் பொன்னேரி-பழவேற்காடு சாலையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது குடிநீர் மாசடைவதால் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தியும், இறால் பண்ணைகளின் கழிவுநீரை பாட்டில்களில் அடைத்து பூமாலை போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதாஅண்ணாகிருஷ்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலைந்து செல்ல கூறினார்.

தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் 6 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்து பேரிடர் பாதுகாப்பு மையத்தில் தங்கப்பட்டனர். பின்னர் மாலையில் 6 மணிக்கு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story