6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2020 11:07 PM GMT (Updated: 5 Oct 2020 11:07 PM GMT)

6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக எம்.ஜி.ஆர்.சிலை நோக்கி 200-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கையில் கரும்புடன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து சேர்ந்தனர்.

பின்னர் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சம்பத், மாவட்ட செயலாளர் தமிழரசன், கவுரவ தலைவர் ராஜகோபால், மாநில குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

6 அம்ச கோரிக்கைகள்

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் துளசி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தியவாறு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மேம்படுத்தி பாதுகாத்திட அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், நடப்பாண்டில் பாக்கி தொகையான ரூ.12 கோடியே 50 லட்சத்தை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெட்டு கூலிகளை தொழிற்சாலை நிர்வாகமே ஏற்க வேண்டும், விவசாயிகளுக்கு கிசான் உழவர் நிதி அட்டையை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 3 வேளாண் திருத்த திட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story