நெல்லை அருகே நடந்த கொலையில் திடீர் திருப்பம்: காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி தனியார் நிறுவன ஊழியரை கொன்றனரா?


நெல்லை அருகே நடந்த கொலையில் திடீர் திருப்பம்: காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி தனியார் நிறுவன ஊழியரை கொன்றனரா?
x
தினத்தந்தி 5 Oct 2020 11:39 PM GMT (Updated: 5 Oct 2020 11:39 PM GMT)

நெல்லை அருகே நடந்த கொலையில் திடீர் திருப்பமாக காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கலெக்டரிடம் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.

நெல்லை,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்த செல்வவிநாயகம் மகன் சதீஷ்குமார் (வயது 25). செல்வவிநாயகம் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார்.

பின்னர் சதீஷ்குமார் நெல்லை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் நானல்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி சதீஷ்குமார் நெல்லை அருகே உள்ள நடுவக்குறிச்சி காட்டுப்பகுதியில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

5 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேர் சரண் அடைந்தனர். மேலும் இந்த கொலையில் மகராஜன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் தந்தை செல்வவிநாயகம், தாயார் சுபஸ்ரீ மற்றும் உறவினர்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

காதல் பிரச்சினை

அப்போது கதறி அழுத சுபஸ்ரீ நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தபோது அங்கு இட்டமொழி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் வசித்து வந்தது. அப்போது சதீஷ்குமாருக்கும், அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாங்கள் சொந்த ஊருக்கு ரெயிலில் திரும்பினோம். அதே ரெயிலில் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நெல்லை வந்தனர்.

இங்கு வந்த பிறகும் அவர்கள் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். அந்த பெண் காதலை கைவிட மறுத்ததால் பெண்ணின் பெற்றோர் கூலிப்படையை ஏவி எனது மகனை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். எனது மகனுடன் பழகிய முத்துக்குமாரை வைத்து இந்த கொலையை அரங்கேற்றி உள்ளனர். மேலும் மும்பையில் இருந்து வந்த ஒருவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த கொலையில் சதித்திட்டம் உள்ளது.

திசை திருப்பும் முயற்சி

மதுபோதையில் கொலை செய்ததாக வழக்கை திசைதிருப்பும் முயற்சி செய்கிறார்கள். அந்த பெண்ணின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தனது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுக்கும் வகையில் அலுவலக பெட்டியில் போட்டார். இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story