ஈரோடு மாவட்டத்தில் 3,635 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு மையங்கள் தயார்


ஈரோடு மாவட்டத்தில் 3,635 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு மையங்கள் தயார்
x
தினத்தந்தி 6 Oct 2020 5:59 AM IST (Updated: 6 Oct 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 3,635 படுக்கை வசதிகளுடன் சிறப்பு கொரோனா மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக சிறப்பு கண்காணிப்பு அதிகாரி காகர்லா உஷா கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு மற்றும் பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரோடு மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி காகர்லா உஷா கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 4-10-2020 வரை 7,246 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 6,041 பேர் சிறந்த சிகிச்சையில் இருந்து முற்றிலும் குணமாகி வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 964 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர்.

ஆகஸ்டு மாதம் 31- ந் தேதி முதல் 4-10-2020 வரை மொத்தம் 59,357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக இதுவரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 56 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

படுக்கை வசதி

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 வகையான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகள், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 284 படுக்கை வசதிகளும் உள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் மொத்தமாக 575 படுக்கைகள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதிக பாதிப்பு ஏற்படுத்தாமல் கொரோனா கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படும் மக்களுக்காக பெருந்துறை ஸ்ரீமகால் 200 படுக்கை வசதி சிறப்பு கொரோனா மையமாக மாற்றப்பட்டு உள்ளது. இதுபோல் கோபி கலைக்கல்லூரி 130 படுக்கைகள், அந்தியூர் ஐடியல் பள்ளி 300 படுக்கைகள், பாரதி மெட்ரிக் பள்ளி 372 படுக்கைகள், பாரதிதாசன் கலை அறிவில் கல்லூரி 564 படுக்கைகள், வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதி 100 படுக்கைகள், கோபி எம்.எஸ்.ஆர்.மகால் 200 படுக்கைகள், பாரதி வித்யாபவன் பள்ளி 180 படுக்கைகள், டான்போஸ்கோ பள்ளியில் 30 படுக்கைகள் என சிறப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவை தவிர கூகலூர், நம்பியூர், சித்தோடு, சென்னிமலை, திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 படுக்கைகள் வீதம் 150 படுக்கை வசதிகள் கொரோனா சிகிச்சைக்கு தயாராக உள்ளன. மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் 3,635 படுக்கைகள் உள்ளன.

முகக்கவசங்கள்

கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள 3 அடுக்கு முகக்கவசங்கள் 1 லட்சத்து 64 ஆயிரத்து 62 இருப்பு உள்ளது. என் 95 முகக்கவசங்கள் 5,479 எண்ணிக்கை உள்ளன. முழு உடல் பாதுகாப்பு கவச உடை 15,382 உள்ளன. சளி மாதிரி சேகரிப்பு உபகரணங்கள் 3 ஆயிரத்து 680, பி.சி.ஆர். எனப்படும் பரிசோதனை உபகரணங்கள் 9,364 என இருப்பில் உள்ளன. பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க 19 லட்சத்து 83 ஆயிரம் முகக்கவசங்கள் ஒதுக்கீடு பெற்று 11 லட்சத்து 98 ஆயிரத்து 18 முகக்கவசங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள முகக்கவசங்கள் விரைவில் வழங்கப்படும்.

பாராட்டு

கொரோனா பரவல் காலத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் தன்னலம் கருதாமல் உழைத்தனர். அனைவருக்கும் பாராட்டுகள். அதுபோல் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தந்தனர்.

அதே நேரம் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளையும் சிலர் மீறி உள்ளனர். இவ்வாறு விதிகளை மீறிய 32 ஆயிரத்து 286 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. முகக்கவசம் அணியாமல் நடமாடியவர்கள், பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தவர்கள் என 42 ஆயிரத்து 283 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 550 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து துறையினரும் சிறப்பாக பணியாற்றி கொரோனா தொற்று பரவல் இல்லாத மாவட்டம் என்ற நிலையை எட்ட வேண்டும்.

பருவமழை

இதுபோல் பருவமழை காலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்க பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்களை தயார்நிலையில் வைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் வரை உள்ளது. நமது சராசரி மழை அளவு 316.30 மி.மீட்டராகும். ஆனால் கடந்த ஆண்டு (2019) 333.4 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. எனவே வருவாய் மற்றும் பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி காகர்லா உஷா கூறினார்.

Next Story