திருப்பாச்சேத்தி அருகே, வீடு புகுந்து தாக்கி ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல்
திருப்பாச்சேத்தி அருகே வீடுபுகுந்து தாக்கி ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது வேம்பத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சமயமுத்து (வயது 63) .இவர் வேம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். திருப்புவனம் யூனியனை சேர்ந்த கானூர் கண்மாய் விறகு ஏலத்தில் வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி, சுரேஷ் ஆகிய இருவருக்கும் இடையே ஏலம் எடுப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் ஊராட்சி மன்ற தலைவர் சமயமுத்து, பாண்டிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளாராம்.
இதனால் சமயமுத்து மீது சுரேசுக்கு விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சுரேஷ் மற்றும் 4 பேர் சேர்ந்து உருட்டுக் கட்டை மற்றும் ஆயுதங்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் சமயமுத்து வீட்டுக்கு சென்று, வீட்டைச் சேதப்படுத்தி அத்துமீறி உள்ளே நுழைந்து சமயமுத்து, இவரது மனைவி சின்னம்மாள் (60) ஆகிய 2 பேரையும் தரக்குறைவாக பேசி உருட்டுக் கட்டையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். படுகாயம் அடைந்த ஊராட்சிமன்ற தலைவர் சமயமுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து சின்னம்மாள் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் சுரேஷ் மற்றும் 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் வேம்பத்தூர் ஊராட்சி தலைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் அவரது ஆதரவாளர் முற்றுகையிட்டனர்.
Related Tags :
Next Story