பாம்பன் தூக்குப்பாலத்தில் பாதிப்பு இல்லை - அதிகாரி தகவல்
பாம்பன் தூக்குப்பாலத்தில் பாதிப்பு இல்லை என அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில்வே பாலம்முக்கிய பங்கு வகித்து வருகின்றது.அதுபோல் நூற்றாண்டுகளை கடந்த பாம்பன் ரெயில்வே பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மையை குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.ஐ.டி. குழு மூலம் தூக்குப்பாலத்தை சுற்றி 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகளில் திடீரென சத்தம் எழுந்துள்ளது. இதையடுத்து தூக்குப்பாலத்தில் பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் குறித்து ஆய்வு செய்ய 2-வது நாளாக நேற்று தென்னக ரெயில்வே பாலங்களின் துணை தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியன், மதுரை வடக்கு கோட்ட முதன்மை பொறியாளர் முகைதீன்பிச்சை உள்ளிட்ட பொறியாளர்கள் குழுவினர் தூக்கு பாலத்தை முழுமையாக ஆய்வு செய்தனர்.
இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தூக்குப்பாலத்தில் உறுதித்தன்மை குறித்து கண்டறிவதற்காக ஐ.ஐ.டி. மூலம் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவியில் இருந்து ரெயில்கள் செல்லும்போது லேசான அதிர்வுகள் இருந்ததால் சத்தம் வந்துள்ளதாக ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. தூக்குப்பாலத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்னும் ஓரிரு நாளில் சென்னையில் இருந்து ஐ.ஐ.டி. குழுவினர் தூக்குப்பாலத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.
ஐ.ஐ.டி. குழு ஆய்வறிக்கைக்கு பின்பு தூக்குப்பாலம் வழியாக பயணிகளுடன் ரெயில் போக்குவரத்தை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.மேலும் தூக்கு பாலத்தில் உப்புக் காற்றால் துருப்பிடித்த நிலையில் உள்ள தகடுகளை அகற்றி இன்னும் கூடுதலாக இரும்பு தகடுகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணி விரைவில் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story