புனே மாநகராட்சி அலுவலகம் சூறை முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 39 பேர் கைது


புனே மாநகராட்சி அலுவலகம் சூறை முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 39 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2020 2:03 AM IST (Updated: 7 Oct 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

புனே மாநகராட்சி அலுவலகத்தை சூறையாடி ரகளையில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

புனே மாநகராட்சி சார்பில் கோண்ட்வாவில் உள்ள ஏவ்லேவாடி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இது குறித்து ஹடப்சர் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோகேஷ் திலேக்கரிடம் முறையிட்டனர்.

இதனால் அவர் புனே மாநகராட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்சினையை சரிசெய்து தரும்படி கோரிக்கை விடுத்தார். இதற்கு அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ. கைது

இதனால் ஆத்திரம் அடைந்த யோகேஷ் திலேக்கர் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த கோப்புகளை தூக்கிவீசி எரிந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

இது பற்றி தகவல் அறிந்த சுவர்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முன்னாள் எம்.எல்.ஏ. யோகேஷ் திலேக்கர் உள்பட அவரது ஆதரவாளர்கள் 39 பேரை கைது செய்தனர். இதில் 4 கவுன்சிலர்களும் அடங்குவர். மேலும் அவர்கள் மீது பொது சொத்தை சேதபடுத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story