சென்னையில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி


சென்னையில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 7 Oct 2020 4:24 AM IST (Updated: 7 Oct 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமைச்செயலக காலனி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

திரு.வி.க.நகர்,

சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு (வயது 57). இவர் 1984-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து தற்போது தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் பரிசோதனை செய்து கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவருக்கு, நுரையீரலில் தொற்று அதிகமாக இருந்ததால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதைத்தொடர்ந்து, நேற்று காலை சிகிச்சை பலனின்றி திடீரென சப்-இன்ஸ்பெக்டர் பாபு உயிரிழந்தார்.

போலீசார் மரியாதை

இவருக்கு நிர்மலா(55) என்ற மனைவியும், சுபாஷினி (38) என்ற மகளும், ராம்குமார் (30) என்ற மகனும் உள்ளனர். ராம்குமார் தற்போது சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை செய்து வருகிறார். உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டரின் உடலை தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, உதவி கமிஷனர் சீனிவாசன் அமைந்தகரை தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை டி.ஜி.பி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையம் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பாபுவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஏற்கனவே மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, நீலாங்கரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் உள்ளிட்ட 6 போலீசார் கொரோனா தொற்றில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story