சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த வக்கீல் கொலையில் தேடப்பட்ட 8 பேர் வாணியம்பாடி கோர்ட்டில் சரண்


சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த வக்கீல் கொலையில் தேடப்பட்ட 8 பேர் வாணியம்பாடி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 7 Oct 2020 4:44 AM IST (Updated: 7 Oct 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த வக்கீல் கொலையில் போலீஸ் தேடிய 8 பேர் வாணியம்பாடி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் மேட்டுத்தெரு லேன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). வக்கீலான இவர், மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வந்தார். இவரது மனைவி ரம்யா, அந்த கட்சியின் நிறுவனராக செயல்பட்டு வருகிறார். கடந்த 4-ந் தேதி இரவு 8.45 மணியளவில் வில்லிவாக்கம், மோகன் ரெட்டி மருத்துவமனை அருகில் ராஜேஷ் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை அடையாளம் தெரியாத 8 பேர் பின்தொடர்ந்து வந்து, ராஜேஷை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு எம்.டி.எச்.ரோட்டைச் சேர்ந்த திருமுருகன் (27) என்பவர் காப்பாற்ற ஓடிவந்தார். அதனைக் கண்ட அந்த நபர்கள் திருமுருகனையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பினார்கள். இதில் அவருக்கு இடது தோள்பட்டையில் வெட்டு விழுந்து காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நோட்டமிட்டு கொலை

தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 4-ந் தேதி தான் ராஜேஷ் வெளியூர் சென்று விட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். அவரை பல நாட்களாக பின் தொடர்ந்த கொலையாளிகள் அவரை நோட்டமிட்டு வெட்டிக் கொலை செய்துள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வக்கீல் ராஜேஷ் கொலை தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (30), அருண் (22), சஞ்சய் (21), ருத்ரேஸ்வரன் (21) மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ் (22), ஸ்ரீநாத் (21), திருநெல்வேலியை சேர்ந்த வைரமணி (20), திருவள்ளூரை சேர்ந்த கிஷோர் குமார் (20)ஆகிய 8 பேர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 9-ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்தவும், அதுவரை வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கவும் மாஜிஸ்திரேட் காளிமுத்துவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் 8 பேரும் வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story