தஞ்சை பூக்குளம் கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டை நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல் - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு


தஞ்சை பூக்குளம் கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டை நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல்  - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 6 Oct 2020 10:30 PM GMT (Updated: 6 Oct 2020 11:27 PM GMT)

தஞ்சை பூக்குளம் கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அரசும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்து வருகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சையை அடுத்த கரந்தை பூக்குளம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று மதியம் வரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. மேலும் அரசு அறிவித்தபடி 1000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், 300 மூட்டை தான் கொள்முதல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி நேற்று கொள்முதல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், குறுவை அறுவடை செய்த நெல்லை கடந்த 15 நாட்களாக கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து பாதுகாத்து வருகிறோம். ஏராளமான விவசாயிகள் நெல்லை குவியல், குவியலாக கொட்டி வைத்துள்ளனர். மேலும் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் நெல் நனைந்து முளைத்து விடுகிறது. மேலும் அதிகாரிகள் 1000 மூட்டை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், இங்கு 300 மூட்டை தான் கொள்முதல் செய்கிறார்கள். மேலும் மூட்டைக்கு 50 ரூபாய் கேட்கிறார்கள்”என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் பன்னீர்செல்வம், தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த விவசாயிகளுக்கு சாக்குகள் வழங்கப்பட்டு கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “நெல்லை தூற்றி எடுத்து வந்தால் தான் கொள்முதல் செய்வோம் என்கிறோம். ஆனால் விவசாயிகள் தூற்றாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்கிறார்கள். தூற்றாமல் நெல்லை எப்படி கொள்முதல் செய்ய முடியும். 5-ந்தேதி 835 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் இனி 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும்”என்றனர்.

Next Story