நாகையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 16 பேர் கைது - உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்


நாகையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 16 பேர் கைது - உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 6 Oct 2020 10:30 PM GMT (Updated: 7 Oct 2020 1:40 AM GMT)

நாகையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாகை அவுரி திடலில் சாமியான பந்தல் அமைத்து, நாற்காலிகள் போடப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், போராட்டம் நடத்த அனுமதிக்காததால், அங்கு போடப்பட்ட பந்தல் பிரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் ஒன்று கூடிய புதிய தமிழகம் கட்சியினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜசேகர சோழன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலின பிரிவில் இருந்து மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 8 பெண்கள் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முரளி, சட்டமன்ற தொகுதி செயலாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தை மாவட்ட செயலாளர் முத்தழகன் தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அருகே கீழப்பிடாகை கிழக்கு கடற்கரை சாலையில் கீழையூர் ஒன்றிய புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாப்பையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 14 பேரை கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Next Story