வேலூரில், மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற வாலிபர் - ஓராண்டு காத்திருந்து துக்க நிகழ்ச்சிக்கு வந்தவரை தீர்த்து கட்டினார்


வேலூரில், மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற வாலிபர் - ஓராண்டு காத்திருந்து துக்க நிகழ்ச்சிக்கு வந்தவரை தீர்த்து கட்டினார்
x
தினத்தந்தி 6 Oct 2020 11:00 PM GMT (Updated: 7 Oct 2020 4:34 AM GMT)

ஒரு ஆண்டுக்கு பின்னர் வேலூர் வந்த மனைவியின் கள்ளக்காதலனை வாலிபர் வெட்டிக்கொன்றார்.

வேலூர்,

வேலூர் சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 38), கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பவருடைய மனைவி ரமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிச் சென்றனர்.

ரமணியை கோபி பெங்களூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் சரவணன் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியை அழைத்துச் சென்றதால் கோபி மீது சரவணன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கு பழி வாங்க சரவணன் காத்திருந்தார்.

இந்த நிலையில் உறவினர் ஒருவரின் துக்கநிகழ்ச்சிக்காக கோபி நேற்று முன்தினம் வேலூர் வந்தார். இதையறிந்த சரவணன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அம்மணாங்குட்டை பகுதியில் கோபி நின்றிருந்தபோது அங்கு வந்த ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கோபியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சரவணன் மனைவி ரமணிக்கும், கோபிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை எழுந்தது. பின்னர் கோபி, ரமணியை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்றார். துக்க நிகழ்ச்சிக்கு கோபி வேலூர் வந்திருந்தபோது ஓராண்டு காத்திருந்த சரவணன் அவரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சரவணனுக்கு 2 பேர் உதவியாக இருந்தது தெரியவருகிறது. அவர்களையும், சரவணனையும் தேடி வருகிறோம் என்றனர்.

Next Story