ரிஷிவந்தியம் அருகே, வீட்டுமனை தகராறில் விவசாயி அடித்துக் கொலை - தம்பி மகன்கள் கைது


ரிஷிவந்தியம் அருகே, வீட்டுமனை தகராறில் விவசாயி அடித்துக் கொலை - தம்பி மகன்கள் கைது
x
தினத்தந்தி 7 Oct 2020 11:15 AM IST (Updated: 7 Oct 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே வீட்டு மனை தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி மகன்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 62) விவசாயி. இவருக்கும் இவரது தம்பி சிங்காரவேலு (60) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் சிங்காரவேலுவின் மகன்கள் ஹரிகிருஷ்ணன்(33) ராஜசேகர்(29) இருவரும் பிரச்சினைக்கு உரிய இடத்தில் விறகுகளை அடுக்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஏழுமலை மற்றும் அவரது மகன் வெங்கடேசன்(40) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணனும், ராஜசேகரும் சேர்ந்து ஏழுமலை, வெங்கடேசன் ஆகியோரை கைகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஏழுமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். வெங்கடேசனுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ஏழுமலையை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். வெங்கடேசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து ஹரிகிருஷ்ணன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டு மனை தகராறில் விவசாயியை அவரது தம்பி மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் ரிஷிவந்தியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story