பாசிமுத்தான் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு


பாசிமுத்தான் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2020 11:45 AM IST (Updated: 7 Oct 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் பாசிமுத்தான் ஓடையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாமலைநகர்,

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் வண்டிகேட் பாசிமுத்தான் ஓடையில் பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகளை அகற்றி வருகின்றனர். இதனை நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் சிதம்பரம் பேருந்து நிலைய பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு, முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பேருந்து நிலைய நடைபாதை பகுதியில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் சிதம்பரம் நகரில் பல இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை அறிந்த கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்ப நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளருக்கு உத்தரவிட்டார். இதேபோல் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் நடராஜர் கோவில், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் சிவசங்கரன், பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன், தாசில்தார் ஹரிதாஸ், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story