தனியார் நிறுவனத்தில் ரூ.51 லட்சம் கையாடல் மேலாளர் கைது


தனியார் நிறுவனத்தில் ரூ.51 லட்சம் கையாடல் மேலாளர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2020 1:48 PM GMT (Updated: 7 Oct 2020 1:48 PM GMT)

கோவையில் தனியார் நிறுவனத்தில் ரூ.51 லட்சம் கையாடல் செய்த மேலாளர் கைது செய்யப்பட்டார். இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது.

கோவை,

கோவை கணபதி நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). இவர் பொன்மணி கல்யாண மண்டபம், பொன்மணி இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியவர் ராமதாஸ் (45). இவர் நல்லாம்பாளையம், குப்பண்ணன் கவுண்டர் லே-அவுட்டில் குடியிருந்து வருகிறார். இவர், கல்யாண மண்டப முன்பதிவு மற்றும் தொழில்நிறுவனங்களின் வரவு செலவுகளை கவனித்து வந்தார்.

ராமதாஸ், கல்யாணமண்டபம் முன்பதிவு மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் வசூலாகும் பணத்தில் பாதி தொகையை தனது வங்கி கணக்கிலும், குறைந்த தொகையை மட்டும் உரிமையாளரின் வங்கி கணக்கில் வரவு வைத்து வந்துள்ளார். ஆனால் வங்கியில் பணம் முழுவதையும் செலுத்தியதுபோல் போலி சான்றிதழ் தயாரித்து உரிமையாளர் சுரேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். இதனால் நீண்ட நாட்களாக இந்த மோசடி வெளியில் வராமல் இருந்தது.

இந்தநிலையில் தனது வங்கி கணக்கை உரிமையாளர் சுரேஷ்குமார் திடீரென்ற ஆய்வு செய்தார். அப்போது அதில் போதிய பணம் இல்லாததை அறிந்து திடுக்கிட்டார். இது குறித்து அவர், மேலாளர் ராமதாசிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பிண் முரணாக பதில் அளித்தார். வங்கி கணக்கை சரி பார்த்த போது ராமதாஸ் மொத்தம் ரூ.51 லட்சம்வரை கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் உரிமையாளர் சுரேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ரூ.51 லட்சம் கையாடல் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமதாஸ் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்து கையாடல் செய்தல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story