கொரோனா அச்சம் காரணமாக மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை


கொரோனா அச்சம் காரணமாக மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Oct 2020 1:57 PM GMT (Updated: 7 Oct 2020 1:57 PM GMT)

கொரோனா அச்சம் காரணமாக மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

கோவை,

கோவையை அடுத்த சீரநாயக்கன்பாளையம் சுகர்கேன் மெயின் ரோட்டை சேர்ந்த 49 வயது மெக்கானிக் ஒருவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவருடைய மனைவி அழைத்து சென்றார். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. எனவே சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பரிசோதனை முடிவு வரும் வரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி டாக்டர்கள் அவரை அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த அவர் தனக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு வந்து விடுமோ என்று அச்சம் அடைந்தார்.

இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து, மனமுடைந்த அவர் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மெக்கானிக் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனவே அவருடைய உடல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3 நாட்கள் கழித்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் மற்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story