பயோமெட்ரிக் முறையால் பொருட்கள் வழங்க தாமதம்: ரேஷன்கடை முன்பு மறியலுக்கு முயன்ற பொதுமக்கள் - சேலத்தில் பரபரப்பு


பயோமெட்ரிக் முறையால் பொருட்கள் வழங்க தாமதம்: ரேஷன்கடை முன்பு மறியலுக்கு முயன்ற பொதுமக்கள் - சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 3:20 PM GMT (Updated: 7 Oct 2020 3:20 PM GMT)

சேலத்தில் பயோமெட்ரிக் முறையால் பொருட்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

தமிழகம் முழுவதும் தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இணைய சேவை சரியாக கிடைக்காததால் சேலம் மாநகரில் உள்ள பல ரேஷன் கடைகளில் கடந்த 2 நாட்களாக பயோமெட்ரிக் கருவியில் பிரச்சினை ஏற்பட்டு பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் பலர் திரண்டு வந்தனர். ஆனால் அங்கு இணையசேவை சரியாக கிடைக்காததால் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடை முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இணையசேவை பிரச்சினையால் மாநகரில் உள்ள பல ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். பலர் ரேஷன் கடைக்கு வந்து சில மணி நேரம் காத்திருந்து பொருட்களை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மேலும் சிலர் ரேஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.

இதுகுறித்து பொதுவினியோக திட்ட அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாநகரில் ஒரு சில இடங்களில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் இணையசேவை சரியாக கிடைக்காததால் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கம்ப்யூட்டர் சர்வர் பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். பயோமெட்ரிக் கருவியில் உள்ள பிரச்சினை ஓரிரு நாட்களில் சரிசெய்யப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும், என்றனர்.

Next Story