சேலம் அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை 3 லட்சத்தை தாண்டியது - டீன் தகவல்


சேலம் அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை 3 லட்சத்தை தாண்டியது - டீன் தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2020 3:24 PM GMT (Updated: 7 Oct 2020 3:24 PM GMT)

சேலம் அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை 3 லட்சத்தை தாண்டி உள்ளதாக டீன் பாலாஜிநாதன் தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பலர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி உள்ளது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:-

ஆரம்பத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்தில், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் எடுக்கப்படும் கொரோனா வைரசின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வகத்தில் 3 லட்சத்து 6 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 4,552 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3,956 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த 310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நுரையீரலால் பாதிக்கப்பட்டு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று மீண்டவர்களுக்காக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மையம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நுரையீரலால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப பயிற்சி அளிக்கப்படும். மேலும் ஆஸ்பத்திரியில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் திரவ ஆக்சிஜன் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story