தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு


தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2020 4:38 PM GMT (Updated: 7 Oct 2020 4:38 PM GMT)

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தார். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் முன்னிலையில் தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணிகள் மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிகளை கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த் ஆய்வு செய்தார்.

ஆய்வு

அதன்படி உப்பாற்று ஓடையில் கரை பலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் தொடர்ந்து நடந்து வரும் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் நடைபெற்று வரும் பணிகள், சிவந்தாகுளம் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள வேண்டும். மழை காலத்துக்கு முன்னதாக இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும். கழிவு நீர் செல்லும் அனைத்து அமைப்புகளையும் தூர்வாரி சுத்தம் செய்து வைக்க வேண்டும். மழையின் போது எந்தவொரு வெள்ள பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மகனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் ஸ்டாலின், மாநகராட்சி நல அலுவலர் அருண்குமார், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் பத்மா, உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், உதவி பொறியாளர் ரகுபதி கணேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story