பர்தா அணிந்து வந்து நகைக்கடைகளில் திருடிய 4 பெண்கள் கைது மாலேகாவில் சிக்கினர் + "||" + 4 women arrested for wearing burda and stealing from jewelery shops
பர்தா அணிந்து வந்து நகைக்கடைகளில் திருடிய 4 பெண்கள் கைது மாலேகாவில் சிக்கினர்
நகைக்கடைகளில் பர்தா அணிந்து வந்து நகைகளை அபேஸ் செய்து வந்த 4 பெண்களை மாலேகாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை பைகுல்லா பகுதியில் சிவம் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடைக்கு கடந்த மாதம் 5-ந்தேதி பர்தா அணிந்த 4 பெண்கள் காரில் வந்து இறங்கினர். வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்த அவர்கள் கடை உரிமையாளர் நிலேஷ் ஜெயினிடம் நகைகளை காண்பிக்கும்படி தெரிவித்தனர்.
இதனால் அவர் பல்வேறு மாடல்கள் கொண்ட நகைகளை காண்பித்தார். சுமார் அரை மணி நேரம் கழித்து நகைகள் எதுவும் வாங்காமல் அப்பெண்கள் காரில் ஏறி சென்றுவிட்டனர். இதையடுத்து நிலேஷ் ஜெயின் நகைகளை மீண்டும் பெட்டகத்தில் வைக்க சரிபார்த்த போது ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 வளையல்கள் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது.
4 பெண்கள் சிக்கினர்
இது சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரின் பதிவெண் தெரியவந்தது.
அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் நாசிக் அருகே உள்ள மாலேகாவ் பகுதியை சேர்ந்த ஒருவரது என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மாலேகாவ் சென்று அந்த நபரை பிடித்து நடத்திய விசாரணையில், பைகுல்லாவில் உள்ள நகைக்கடையில் பர்தா அணிந்து சென்று நகைகளை திருடிய 4 பெண்களும் போலீசாரிடம் சிக்கினர்.
விசாரணையில் அவர்களது பெயர் சஜ்டா(வயது30), நாஜியா சேக்(50), நஸ்ரின் சேக்(50), யாஸ்மின் கான்(35) என்பதும், இவர்கள் மும்பை, தானே, நாசிக், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடையிலும் இதேபாணியி்ல் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.