சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கு: நடிகை ரியாவுக்கு நிபந்தனை ஜாமீன்


சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கு: நடிகை ரியாவுக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 8 Oct 2020 3:16 AM IST (Updated: 8 Oct 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில், அவரது காதலி ரியாவுக்கு மும்பை ஐகோர்ட்டு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34) கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதேபோல சுஷாந்த் சிங்கின் வங்கிக்கணக்கில் இருந்து பணமோசடி நடந்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்தது.

அமலாக்கத்துறை விசாரணையின் போது சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் காதலன் சுஷாந்திற்காக போதைப்பொருள் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த மாதம் 9-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வீட்டு வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன்

நடிகை ரியா உள்ளிட்டவர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்தநிலையில் அவர்கள் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரங் கோத்வால் நேற்று நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நடிகை ரியா, காதலன் சுஷாந்திற்காக போதைப்பொருள் வாங்க நிதி அளித்தார் என்பதையும், அவர் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தார் என்பதையும் ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும் அவர் முன் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்றும் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.

கடும் நிபந்தனைகள்

அதே வேளையில் ஜாமீனுக்காக ரியாவுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் முதல் 10 நாட்களுக்கு தினந்தோறும் காலை 11 மணிக்கு வீட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அடுத்த 6 மாதத்திற்கு மாதந்தோறும் 1-ந்தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் முன் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியூர் செல்லக்கூடாது, போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சிறப்பு கோர்ட்டின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பிணைத்தொகையாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ரியாவின் தம்பிக்கு ஜாமீன் மறுப்பு

இதேபோல சுஷாந்த் சிங்கின் உதவியாளர்களான சாமுவேல் மிரண்டா, தீபேஷ் சாவந்த் ஆகியோர் சுஷாந்த் சிங் அல்லது ரியா கேட்டுக்கொண்டதின் பேரில் போதைப்பொருள் வாங்கியதை கடுமையான சட்டப்பிரிவுக்குள் கொண்டு வர முடியாது என்று கூறி அவர்களுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் நடிகை ரியாவின் தம்பி சோவிக் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இந்த நிலையில் நடிகை ரியா நேற்று மாலை 5.30 மணி அளவில் பைகுல்லா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Next Story