மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் குடும்பத்தினருக்கு எடியூரப்பா நேரில் ஆறுதல் + "||" + Eduyurappa offers condolences to the family of late Union Minister Suresh Angadi
மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் குடும்பத்தினருக்கு எடியூரப்பா நேரில் ஆறுதல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று நேரில் ஆறுதல் கூறினார். அப்போது சுரேஷ் அங்கடிக்கு டெல்லியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு,
மத்திய ரெயில்வே இணை மந்திரியாக இருந்தவர் சுரேஷ் அங்கடி. கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த இவர் கடந்த மாதம் (செப்டம்பர்) கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் டெல்லியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பெலகாவியில் உள்ள சுரேஷ் அங்கடியின் வீட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மந்திரிகள் உள்ளிட்டோர் நேரில் வந்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தனி விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு சென்றார்.
பின்னர் அவர், பெலகாவி விஸ்வேஸ்வரய்யா நகரில் உள்ள சுரேஷ் அங்கடியின் வீட்டிற்கு வந்தார். அங்கு மறைந்த சுரேஷ் அங்கடியின் உருவப்படத்திற்கு எடியூரப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு அங்கு இருந்த சுரேஷ் அங்கடியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது சுரேஷ் அங்கடியின் தாயாரின் கையைப்பிடித்து தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
எடியூரப்பா பேசும்போது சுரேஷ் அங்கடி சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தார். அவர் ரெயில்வே துறை மந்திரியாக பதவியேற்ற பிறகு கர்நாடகத்தில் நிலுவையில் இருந்த திட்டங்களுக்கு அனுமதி பெற்று அதை செயல்படுத்த மிகுந்த ஆர்வமுடன் பணியாற்றினார்.
டெல்லியில் நினைவு மண்டபம்
மேலும் அவர் நான்கு முறை எம்.பி.யாக இருந்து இந்த பகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு நான் தினமும் அவரை தொடர்பு கொண்டு பேசி உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நன்றாக இருப்பதாக என்னிடம் கூறினார். அவர் மீண்டு வந்துவிடுவார் என்று நம்பினேன். ஆனால் திடீரென்று மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். டெல்லியில் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த பணிகள் விரைவாக தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், நீர்ப்பாசனத் துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன்பிறகு எடியூரப்பா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜனதா எச்சரித்துள்ளது.
விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்கி உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் புகைப்படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்று மந்திரி ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.