புதுச்சேரியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது.
புதுச்சேரி,
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 490 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 316 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரெயின்போ நகரை சேர்ந்த 75 வயது முதியவரும், ஜிப்மரில் சேதராப்பட்டு சிவசக்தி நகரை சேர்ந்த 75 வயது முதியவரும், மாகியில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளை சந்திக்காமல் இருந்த மாகியில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்தார்.
30 ஆயிரத்தை தாண்டியது
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 563 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 30 ஆயிரத்து 161 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 ஆயிரத்து 680 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,636 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 44 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 ஆயிரத்து 930 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 551 பேர் பலியாகி உள்ளனர்.
அவர்களில் 459 பேர் புதுச்சேரியையும், 46 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகி பகுதியையும் சேர்ந்தவர்களாவர். புதுவையில் உயிரிழப்பு 1.83 சதவீதமாகவும், குணமடைவது 82.66 சதவீதமாகவும் உள்ளது.