வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2020 12:06 AM GMT (Updated: 8 Oct 2020 12:06 AM GMT)

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

தென்காசி,

தமிழக அரசு சமீபத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தென்காசி வந்திருந்தார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று தென்காசியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் முன்னிலை வகித்தார்.

நீர்வள ஆதார அமைப்பு

இந்த கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) பொறியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை நேரில் சென்று அடிக்கடி பார்வையிட வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய தேவையான மணல் நிரம்பிய குப்பைகளை முன்கூட்டியே சேகரித்து வைத்தல் வேண்டும். தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள நீர்நிலை புறம்போக்கு களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படும் காலங்களில் ஆற்றோர பகுதி வாழ் மக்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

கட்டிடம் மற்றும் கட்டுமானம்

பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) வருவாய் துறையினருடன் இணைந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக மாவட்டத்திலுள்ள புயலால் பாதிக்கப்பட்டோர் தங்குமிடம், பள்ளி கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களை முன்னதாகவே ஸ்தல பார்வையிட்டு மின் வசதி மற்றும் தண்ணீர் வசதி எந்தவித தங்கு தடையும் இன்றி 24 மணி நேரமும் பயன்படுத்தும் அளவில் தயார் நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை

நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலையில் உள்ள பாலங்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் செல்ல வழியின்றி இருந்தால் நெடுஞ்சாலை பொறியாளர்கள் அப்பகுதிகளில் உள்ள பாலங்களை உடனே ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும். சாலைகளில் உள்ள மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அதை உடனடியாக சீர் செய்ய கிரேன் போன்ற வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனரக இயந்திரங்களான புல்டோசர், ஜேசிபி ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாலையில் உள்ள பாலங்கள் பழுதடைந்தால் போக்குவரத்து பாதிக்காதவாறு கண்காணித்து உடன் சரி செய்ய வேண்டும். சாலைகளில் வெள்ள நீரால் அரிப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது அவசரகால மாற்றுப்பாதை கண்டறிந்து வைத்திருத்தல் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட கலெக்டர்

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பேசியதாவது:

சுகாதாரத்துறையினர் தேவைப்படும் மருந்துகளை முன்கூட்டியே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கை முன்கூட்டியே எடுக்க வேண்டும். பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க தக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஜெனரேட்டர்கள், மருத்துவக்குழு வாகனங்கள் மற்றும் தொடர்புடைய அடிப்படை வசதிகள் அனைத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவசர உதவிக்கு தேவையான மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உணவு வழங்கல் பிரிவு, நுகர்பொருள் வாணிப கழகம், இணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) ஆகியோர் தேவையான உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். பொது விநியோகத் துறையில் எந்த நேரத்திலும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. ஆகிய சில்லறை விற்பனை நிலையங்களில் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

கல்வித்துறை

கால்நடை பராமரிப்புத் துறையினர் கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். கால்நடை தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இருப்பு உள்ள இடங்களில் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கல்வித்துறையினர் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிக் கட்டடங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா? என்பதனை கண்காணித்து அனைத்து கோட்டக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்து செயல்பட

மின்சார வாரியத்தின் மூலம் மின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். மின்கம்பங்கள் கீழே விழுந்தால் விபத்து ஏற்படாதவாறு அதிக வெள்ளம் ஏற்படும் நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் வினியோகத்தை சீர் செய்ய வேண்டும். இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பாதிப்புகளின் போது மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் முன்னேற்பாடு பணிகளை ஒருங்கிணைந்து முனைப்புடன் செயலாற்றி தென்காசி மாவட்டத்தில் எவ்வித உயிர் சேதமும் பொருள் சேதமும் இல்லாமல் காத்திடும் வகையில் சிறப்புடன் செயல்பட வேண்டும் இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், கூட்டுறவு துறை மண்டல மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story