கோவையில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு


கோவையில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Oct 2020 6:30 AM GMT (Updated: 8 Oct 2020 6:22 AM GMT)

கோவையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 4-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் மாடியில் உள்ள அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோவை பீளமேடு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்கள் செல்லும் காட்சி பதிவாகியிருக்கிறதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கோவையில் சமீப காலமாக வீடுகளில் திருட்டு சம்பவங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இத்தகைய குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக கோவை மாநகர போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கெம்பட்டி காலனியில் நடந்த மூதாட்டி கொலையில் இன்னும் கொலையாளிகள் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story