பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட இளம்பெண் பிணமாக மீட்பு - 2-வது நாளாக கணவர், சிறுமியை தேடும் பணி தீவிரம்


பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட இளம்பெண் பிணமாக மீட்பு - 2-வது நாளாக கணவர், சிறுமியை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Oct 2020 12:30 PM IST (Updated: 8 Oct 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இளம் பெண் பிணமாக மீட்கப்பட்டார். கணவர் மற்றும் சிறுமியை போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள புளியப்பம் பாளையத்தை சேர்ந்த சேது என்பவரது மனைவி அன்னபூரணி (வயது 40). இவரது மூத்த மகள் தேவி (19). இளைய மகள் சரண்யா (12). தேவியின் கணவர் சேதுபதி (24). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் பொங்கலூரை அடுத்த காரப்பாளையம் வந்துள்ளனர். அந்த வழியாக செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர்.

முதலில் சேதுபதி உள்ளே இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீர் அவரை இழுத்துச் சென்றது. அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி தேவியும் வாய்க்காலில் குதித்தார். அவரையும் தண்ணீர் அடித்துச் சென்றது. இவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற சிறுமி சரண்யாவும் வாய்க்காலில் குதித்தார். அவரையும் தண்ணீர் இழுத்து சென்றது.

இந்த சம்பவத்தை பார்த்த அன்னபூரணி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தேடுதல் பணியை தொடர்ந்தனர். இரவு நேரமாகிவிட்டதால் தேடுதல் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது.

இதில் நேற்று மதியம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேவியின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவருடைய உடலை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சேதுபதி மற்றும் சிறுமி சரண்யா ஆகியோரின் நிலைமை என்ன? என்று தெரியவில்லை. அவர்களை போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story