வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை: மராட்டியத்தை சேர்ந்த 2 பேர் கைது


வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை: மராட்டியத்தை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2020 10:01 PM GMT (Updated: 8 Oct 2020 10:01 PM GMT)

கொப்பல் அருகே, கர்நாடக கிராமிய வங்கியில் ரூ.1½ கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மராட்டியத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொப்பல்,

கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகா பெவூர் கிராமத்தில் கர்நாடக கிராமிய வங்கி உள்ளது. இந்த வங்கியில் இரவு நேர காவலாளிகள் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி இரவு கியாஸ் கட்டரை பயன்படுத்தி வங்கியின் இரும்பு கதவை உடைத்த மர்மநபர்கள் வங்கிக்குள் புகுந்து லாக்கரை உடைத்து ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்று இருந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து எலபுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா உத்தரவின்பேரில், தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். மேலும் பெவூர் கிராமம் மராட்டிய எல்லையில் உள்ளதால், மராடடியத்தை சேர்ந்தவர்கள் தான் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெவூர் அருகே ஜலகி கிராமத்தில், எலபுர்கா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மராட்டிய பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்திய போலீசார், காரில் வந்த 2 பேரிடமும் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு முன் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் தான் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கர்நாடக கிராமிய வங்கியில் ரூ.1½ கோடி மதிப்பிலான நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 370 கிராம் தங்கநகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கம், 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

Next Story