கலபுரகி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்


கலபுரகி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்
x
தினத்தந்தி 9 Oct 2020 3:43 AM IST (Updated: 9 Oct 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி அருகே, கடன் தொல்லையால் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கலபுரகி,

கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா பெனகனஹள்ளியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 48). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலையில் பயிர்சாகுபடி செய்ய கூட்டுறவு, தனியார் வங்கிகளில் இருந்து பசவராஜ் ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பெனகனஹள்ளியில் பெய்த கனமழையால், பசவராஜ் நிலத்தில் இருந்த பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் அவர் மனம் உடைந்தார். மேலும் பயிர்சாகுபடி செய்ய வங்கிகளில் இருந்து வாங்கிய கடனையும் பசவராஜால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, பசவராஜ் தனது உடல் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பசவராஜ் மீது பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் உடல்கருகி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்த சேடம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பசவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சேடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பசவராஜ், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேடத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story