பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பழகன் எம்.எல்.ஏ. திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி,
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று முதல் புதுவையில் பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
கல்வி முறையில் தமிழகத்தை அப்படியே பின்பற்றும் புதுவை அரசு பள்ளிகளை திறப்பதில் மட்டும் முரண்படுவது ஏன்? என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார். தனது தொகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க விடமாட்டேன் என்றும் அவர் எச்சரித்து இருந்தார்.
கதவை மூடி ஆர்ப்பாட்டம்
இதையடுத்து உப்பளம் தொகுதியில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அந்த பள்ளிகள் திறப்பினை வேறொரு தேதிக்கு ஒத்திவைத்தன. ஆனால் புதுவை-கடலூர் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி திறக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி அறிந்ததும் அன்பழகன் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்று அந்த பள்ளியின் கதவை இழுத்துப்பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் அவசர கோலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது. கல்லூரிகளை திறக்க முடிவு எடுக்காத நிலையில் பள்ளிகள் திறக்க முடிவு எடுத்திருப்பது உள்நோக்கத்தையே காட்டுகிறது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களுடைய உயிர் சம்பந்தமான பிரச்சினையில் ஆளும் அரசு தவறான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் கவர்னருக்கு உண்டு. அந்த வகையில் அசாதாரண சூழ்நிலையில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிரோடு விளையாடும் புதுச்சேரி அரசின் இந்த முடிவை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் புதுவை மாநிலத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பள்ளிகளை திறக்க அனுமதிக்கவேண்டும்.