நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கவர்னர் மாளிகை நோக்கி பா.ஜ.க.வினர் ஊர்வலம்


நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கவர்னர் மாளிகை நோக்கி பா.ஜ.க.வினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 8 Oct 2020 10:43 PM GMT (Updated: 8 Oct 2020 10:43 PM GMT)

முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யக்கோரி கவர்னர் மாளிகை நோக்கி பா.ஜ.க.வினர் ஊர்வலம் சென்றனர்.

புதுச்சேரி,

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தின்போது, புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். இதன்மூலம் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி அவதூறு கருத்துகளை பரப்புவதாகவும், அவர் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்தப்போவதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி புதுவை காமராஜர் சிலை அருகே நேற்று பா.ஜ.க.வினர் கூடினார்கள். அங்கிருந்து அவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

தடுத்து நிறுத்தம்

ஊர்வலத்துக்கு மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் நேரு வீதி, மிஷன்வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது. அதற்கு மேல் செல்ல போலீசார் அவர்களை அனுமதி மறுத்தனர். இதையொட்டி அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஊர்வலமாக வந்தவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று அங்கு கோஷம் எழுப்பினார்கள். இதில் மாநில துணைத்தலைவர்கள் செல்வம், தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், மாநில செயலாளர்கள் ரத்தினவேல், அகிலன், நாகராஜ், ஜெயந்தி, லதா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட தலைவர்கள் அசோக்பாபு, நாகேஷ்வரன், ஆனந்தன், இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் கோபதி, மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் சிவக்குமார், விவசாய அணி தலைவர் புகழேந்தி, சிறுபான்மை அணி தலைவர் விக்டர் விஜயராஜ், தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர் ஆறுமுகம், பிற அணி தலைவர்கள் பாலாஜி, ராஜமவுரியா, கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கவர்னருக்கு மனு

ஊர்வலத்தின் முடிவில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கவர்னர் மாளிகைக்கு சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்யக்கோரி மனு அளித்தனர். பா.ஜ.க.வினரின் இந்த போராட்டத்தால் கவர்னர் மாளிகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story