‘புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு’ கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவு


‘புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு’ கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவு
x
தினத்தந்தி 8 Oct 2020 11:01 PM GMT (Updated: 8 Oct 2020 11:01 PM GMT)

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு என்று கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நடந்த மாணவர் சேர்க்கையில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு அந்த கல்லூரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதையொட்டி சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2017-ம் ஆண்டு முதல் சரியான மருத்துவ சேர்க்கைகளை அமைப்பதில் நிர்வாகத்தின் பணிகள் நீதிமன்றங்களால் கவனிக்கப்படுகிறது. இது நம்பகத்தன்மையுடன் கூடிய மதிப்பு உடையது. எனவே நல்ல நோக்கத்துடன் செய்யக்கூடிய எந்த வேலையும் வீணாகாது. அந்த நேரத்தில் உங்களில் பலர் இங்கு இல்லை.

இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றமாகும். இது எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக கையாளப்பட்டது. ஒவ்வொரு மருத்துவ இடமும் பலருக்கு ஒரு பெரிய வருவாயாக இருந்தது. அது பெரிய தொகை. எங்களுடன் பணியாற்றும் சிலர் தைரியமாக செயல்பட்டனர். இவர்களை தவிர மற்றவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது சந்தேகத்துக்குரியவர்களாக உள்ளனர்.

தீபாவளி பரிசு

இவை அனைத்தும் இப்போது பதிவு செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் சரியான நிகழ்வுகளை சரியான நேரத்தில் சரியான வழியில் செய்யவேண்டும். சரியானதை செய்ய தயங்கவே கூடாது. இயற்கை நமக்கு உதவும்.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் கந்தவேலு இந்த நிகழ்வில் முக்கியமாக செயல்பட்டுள்ளார். எதிர்மறையான அரசியல் அழுத்தங்களை தைரியமாக எதிர்கொண்டார். சி.பி.ஐ. விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. தேசிய அளவில் நமது மாணவர்களுக்கு இந்த தீர்ப்பு இப்போது ஒரு பெரிய தீர்வாகும். புதுச்சேரி மக்களுக்கு இது ஒரு தீபாவளி பரிசு.

ஆக்சி மீட்டர்கள்

சுகாதாரத் துறையில் பணிபுரிவோர் விவரங்கள் போதுமானதா அதில் ஏதும் முன்னேற்றங்கள் தேவையா என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகக்குழு (ஐ.சி.எம்.ஆர்.) ஆய்வு செய்யும். கொரோனா தொற்று இறப்புகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகக்குழு ஆராய வேண்டும். காவல்நிலையங்களுக்கு தேவையான ஆக்சி மீட்டர்களை கொரோனா நிதியில் இருந்து வாங்க வேண்டும். உள்ளாட்சித்துறை இதில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பயோ கழிவுகளுக்கான வண்ணத்தொட்டிகளை மருத்துவத்துறை வழங்க வேண்டும். சுகாதாரத்துறையில் பிரேத்யேகமாக கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக போலீஸ் டிஜிபி, உள்ளாட்சித்துறை ஆய்வு செய்ய வேண்டும்

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story