மியான்மரில் மீட்கப்பட்ட 8 மீனவர்கள் சென்னை வந்தனர் விமான நிலையத்தில் அமைச்சர், தி.மு.க.வினர் வரவேற்பு


மியான்மரில் மீட்கப்பட்ட 8 மீனவர்கள் சென்னை வந்தனர் விமான நிலையத்தில் அமைச்சர், தி.மு.க.வினர் வரவேற்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 4:44 AM IST (Updated: 9 Oct 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

மியான்மரில் மீட்கப்பட்ட சென்னை மீனவர்கள் 8 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தி.மு.க.வினர் வரவேற்றனர்.

ஆலந்தூர்,

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி திருவொற்றியூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 55), லட்சுமணன்(34), முருகன் சின்னதேவர் (58), தேசப்பன் (28), திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த கண்ணன், தேசப்பன், புது வண்ணாரபேட்டையை சேர்ந்த சிவக்குமார், ராயபுரத்தை சேர்ந்த ரகு (37) , பாபு (38) ஆகிய 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி கரைக்கு திரும்ப வேண்டிய இவர்கள் வரவில்லை. மாயமான மீனவர்களை கடலோர காவல்படையினர் தேடி வந்தனர்.

மியான்மரில் மீட்பு

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மியான்மர் கடற்கரை பகுதியில் 9 மீனவர்கள் மீட்கப்பட்டனர். அதன்பிறகு பாபு என்ற மீனவர் கடலில் விழுந்துவிட்டதால் அவரை தேடும் பணி நடந்தது.

மீட்கப்பட்ட 8 மீனவர்கள், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மியான்மரில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் டெல்லிக்கு வந்தனர். டெல்லியில் தங்க வைக்கப்பட்ட 8 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தது.

சென்னை வந்தனர்

இதையடுத்து நேற்று காலை டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் மீனவர்கள் 8 பேரும் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மியான்மர் நாட்டில் மீட்கப்பட்ட சென்னை மீனவர்களை கடல் வழியாக அழைத்து வர வானிலை காரணமாக முடியாததால் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அரசு முயற்சியால் மீனவர்கள் வந்து உள்ளனர். இந்திய அரசுக்கும், மியான்மர் அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பாபு என்ற மீனவர் கடல் சீற்றம் காரணமாக மாயமாகிவிட்டார். அவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். மியான்மர் காடுகள் நிறைந்த பகுதி என்பதால் அவர் எங்காவது கரை ஒதுங்கி இருக்கிறாரா? என்று தேடி வருகிறோம். காடு பகுதிகளில் வசிக்கும் கிராமத்தினர், கடற்கரை ஒட்டி உள்ள மீனவர்களுக்கும் மாயமான மீனவர் குறித்து தகவல் தரப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுமார் 78 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பிய மீனவர் ரகு நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையை சேர்ந்தவர்கள் உதவி

காசிமேட்டில் இருந்து 9 மீனவர்கள் சென்றோம். நான்தான் படகை ஒட்டி சென்றேன். 3 நாள் மீன்பிடியில் இருந்தோம். 4-வது நாள் என்ஜின் பழுதடைந்து விட்டது. பேட்டரி இல்லாததால் எந்தவித தொடர்பும் கொள்ள முடியவில்லை. இங்கிருந்து எங்களை தொடர்புகொண்டு பேசுவது எங்களுக்கு கேட்டது. ஆனால் நாங்கள் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை. ஏதாவது படகு வருமா? என்று காத்திருந்தோம். 15 நாட்களாக எந்த படகும் தெரியவில்லை. கப்பல் வெளிச்சத்தில்தான் இருந்தோம். 17-வது நாள் இலங்கை படகில் வந்த மீனவர்கள் 4 நாட்கள் எங்களுக்கு உதவினார்கள். ஆனால் படகு என்ஜின் சரியாகவில்லை. 3 ஆயிரம் மீன்களும், ரூ.ஆயிரம் மதிப்புள்ள டீசலை எடுத்து கொண்டு எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் என்றோம். இந்திய கடற்படையோ, இலங்கை கடற்படையோ வந்தால் பாதிப்பு எற்படும் என்று கூறினாலும், நாங்கள் கேட்டதால் உதவினார்கள்.

மியான்மர் மீனவர்கள் மீட்டனர்

படகில் கயிறு கட்டி அழைத்து வர முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த படகு எங்கள் படகை இழுக்க முடியாமல் சென்றுவிட்டது. 27 நாட்கள் சமாளித்தோம். மாலை 6 மணிக்கு பின்னர் இருட்டாக இருக்கும். 29-வது நாள் வலையில் கிடைக்கும் மீன்களை வைத்து சாப்பிட்டோம்.

58-வது நாள் மியான்மர் நாட்டு மீனவர்கள் படகில் வந்து எங்களை மீட்டனர். அவர்களிடம் பசியாக இருக்கிறது என சாப்பிட ஏதாவது தரும்படி கேட்டோம். அந்த மீனவர்கள் சாப்பிட தந்தனர்.

நன்றாக கவனித்தனர்

பின்னர் மியான்மர் நாட்டு கடற்படைக்கு தகவல் தந்ததும், கடற்படை வந்தது. கடலில் எங்களை மியான்மர் நாட்டு கடற்படை நன்றாக கவனித்துக்கொண்டனர். இந்திய கடற்படையினரிடம் இருந்து தகவல் வந்ததும் ஒப்படைக்கப்படுவீர்கள் என்றனர். ஆனால் வானிலை சரியாக இல்லாததால் படகுகளை கரைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு ஒரு அறையில் தங்க வைத்தனர். எங்களை சிறையில் அடைக்கவில்லை.

இந்திய அரசு கூறியதால் நன்றாக பார்த்து கொண்டனர். 58 நாளாக எங்களுடன் இருந்த ஒரு மீனவர் மாயமானது கவலையாக உள்ளது. மியான்மரில் 7 நாள் இருந்தோம். கடலில் பயணம் செய்ய படகு சரியாக இருக்கிறதா? என்று பார்க்க சென்றபோது பாபு மாயமாகி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.வினர் வரவேற்பு

பின்னர் மீனவர்கள் வெளியே அழைத்து வரப்பட்டதும் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சுதர்சனம் தலைமையில் தி.மு.க.வினர் மீனவர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து வரவேற்றனர்.

ஒரே நேரத்தில் அமைச்சரும், தி.மு.க.வினரும் மீனவர்களுக்கு வரவேற்பு அளித்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story