கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி + "||" + Tamil Nadu is a pioneer state in corona prevention work, says Minister Senkottayan
கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதற்காக முதல்-அமைச்சரை பிரதமரே பாராட்டி உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தாம்பரம்,
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 107 பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணையை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
முன்னோடி மாநிலம்
கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக பணியாற்றுவதாகவும், தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக உள்ளதாகவும் முதல்-அமைச்சரை பிரதமர் பாராட்டி உள்ளார்.
பள்ளிகள் திறப்பதற்கு தற்போது எந்தவித சாத்திய கூறுகளும் கிடையாது. ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் 26 மாணவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் உயிர் முக்கியம்
பள்ளிகள் திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்ற அடிப்படையில் இந்த அரசு, பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது. அதன் பிறகு முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை ஒருங்கிணைந்து ஒரு கூட்டம் நடத்தி ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும். வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அமைச்சர் பென்ஜமின், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சென்னை-திருவள்ளூர்
அதேபோல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் உள்ள சர்.ராமசாமி முதலியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 169 பள்ளிகளுக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.