மாவட்ட செய்திகள்

திருச்சிற்றம்பலம் அருகே, நள்ளிரவில் 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை + "||" + Near Tiruchirappalli, jewelery-money robbery at 3 houses at midnight - Mystery persons handcuffed

திருச்சிற்றம்பலம் அருகே, நள்ளிரவில் 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சிற்றம்பலம் அருகே, நள்ளிரவில் 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
திருச்சிற்றம்பலம் அருகே நள்ளிரவில் மூன்று வீடுகளில் புகுந்த மர்ம மனிதர்கள், அங்கிருந்த நகை-பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்று விட்டனர்.
திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி(வயது 48). விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் தாழ்வாரத்தில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் காற்றுடன் லேசான மழை பெய்து கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம மனிதர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு மர பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் நகைகள், மாடு விற்ற பணம் ரூ.13 ஆயிரத்து 500 ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இதே பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் பக்கீர் முகமது. இவரது மாடி வீட்டில் உள்ள அறையில் அவரது மருமகள் அப்ரோஸ் ஜமீலா(25) தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அப்ரோஸ் ஜமீலா கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்தனர்.

இதில் திடுக்கிட்டு கண்விழித்த அப்ரோஸ் ஜமீலா, சுதாரித்துக்கொண்டு மர்ம நபர்களிடம் இருந்து தனது சங்கிலியை பிடித்துக்கொண்டார். ஆனாலும் சங்கிலியின் பெரும்பாலான பகுதி மர்ம நபர்களிடம் சிக்கிக்கொண்டது. ஒரு பவுன் சங்கிலியை மட்டுமே அவரால் மீட்க முடிந்தது. 2 பவுன் சங்கிலியுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதேபோல் பக்கீர் முகமது வீட்டின் பின்பக்கத்தில் வசிப்பவர் பிரபு(38). அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், வீட்டிற்குள் பீரோவில் இருந்த 4 கிராம் தங்கத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூன்று பேரும் தனித்தனியாக திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். தகவல் அறிந்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். தஞ்சையில் இருந்து விரல் ரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

போலீஸ் மோப்பநாய் ராஜராஜன் வரவழைக்கப்பட்டு துப்புத்துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நள்ளிரவில் மூன்று வீடுகளில் மர்ம மனிதர்கள் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.