குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா கொடியேற்றம் சப்பர வீதி உலா, தேரோட்டம் ரத்து


குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா கொடியேற்றம் சப்பர வீதி உலா, தேரோட்டம் ரத்து
x
தினத்தந்தி 9 Oct 2020 5:32 AM IST (Updated: 9 Oct 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சப்பர வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசுதிருவிழா நேற்று தொடங்கி யது. காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. திருவிழா வருகிற 17-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவின் 4-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 14-ந் தேதி நடராஜருக்கு காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 15-ந் தேதி காலை 10 மணிக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

தேரோட்டம் ரத்து

17-ந் தேதி காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் விழாக்கள் அனைத்தும் கோவிலின் உள்பிரகாரத்திலேயே நடைபெறும். வழக்கமாக நடைபெறும் சப்பர வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் உதவி ஆணையர் மா.கண்ணதாசன், தக்கார் சங்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story