மாவட்டத்தில் மிதமான மழை: தென்னங்குடிபாளையம் ஏரி நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி


மாவட்டத்தில் மிதமான மழை: தென்னங்குடிபாளையம் ஏரி நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 Oct 2020 10:30 PM GMT (Updated: 9 Oct 2020 2:19 AM GMT)

சேலம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 46 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. தென்னங்குடிபாளையம் ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் வேளையில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது.

ஆத்தூர் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள வசிஷ்டநதி தடுப்பணையில் தண்ணீர் ஏற்கனவே தேங்கி நின்றது. தற்போது பெய்த மழையால் அணை நிரம்பி தண்ணீர் வெளியே செல்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்த்து வருகிறார்கள். இதனால் வசிஷ்டநதி சுற்றி உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேபோல ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையம் பகுதியில் பெய்த மழையால் ஏற்கனவே ஏரி நிரம்பி வழிந்தது. தற்போது பெய்த மழையால் மீண்டும் இரண்டாவது முறையாக ஏரி நிரம்பி தண்ணீர் ஓடுகிறது. இதனால் தென்னங்குடிபாளையம், அய்யனார்பாளையம், புதுப்பாளையம் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 46 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

காடையாம்பட்டி-10, வீரகனூர்-28, ஆணைமலை-18, கரியகோவில்-12, வாழப்பாடி-8, சேலம்-4.8, ஆத்தூர்-31.4, பெத்தநாயக்கன்பாளையம்-20, ஓமலூர்-10, ஏற்காடு-20, கெங்கவல்லி-40.

Next Story