கோடநாடு வழக்கில் ஊட்டி கோர்ட்டில் 10 பேர் ஆஜர்; 5 சாட்சிகளிடம் விசாரணை - தி.மு.க. எம்.எல்.ஏ. வந்ததால் பரபரப்பு


கோடநாடு வழக்கில் ஊட்டி கோர்ட்டில் 10 பேர் ஆஜர்; 5 சாட்சிகளிடம் விசாரணை - தி.மு.க. எம்.எல்.ஏ. வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 6:30 AM GMT (Updated: 9 Oct 2020 6:19 AM GMT)

கோடநாடு வழக்கில் ஊட்டி கோர்ட்டில் 10 பேர் ஆஜராகினர். 5 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. வழக்கு குறித்து கேட்பதற்காக திமுக எம்.எல்.ஏ. கோர்ட்டுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கோவை சிறையில் இருந்து சயான், மனோஜ் உதயகுமார், ஜித்தின்ராய், பிஜின், மனோஜ்சாமி ஆகிய 6 பேரை போலீசார் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள சம்சீர்அலி, சந்தோஷ்சாமி, சதீசன், திபு ஆகிய 4 பேர் ஆஜராகினர்.

மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை முன்னிலையில் விசாரணை நடந்தது. கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் வடமாநில காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்வதற்காக மொழிபெயர்த்த கோத்தகிரி தலைமை காவலர் ரிச்சர்ட் ஜேக்கப், கோடநாடு ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வம், பங்களாவில் பணிபுரிந்த லட்சுமி மற்றும் கருப்பசாமி, விஜயன் ஆகிய 5 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் நந்தகுமார் ஆஜரானார். தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதுகுறித்து எதிர்தரப்பு வக்கீல் ஆனந்த் நிருபர்களிடம் கூறும்போது, கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடந்தது. ஆனால் விசாரணையில் சாட்சிகள் போலீசார் 5 மாதங்கள் கழித்து தங்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர். இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 33 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வழக்கில் இருந்து 50 சாட்சிகள் நீக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடமும் விசாரணை நடத்துவது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றார்.

முன்னதாக நேற்று மதியம் வழக்கீலும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான திராவிடமணி ஊட்டி கோர்ட்டுக்கு திடீரென வந்தார். அவர் கோர்ட்டுக்குள் சென்று சயான், மனோஜ் ஆகிய 2 பேரிடம் பேசினார். பின்னர் எதிர்தரப்பு வக்கீல்களான ஆனந்த், விஜயனிடம் வழக்கு விசாரணை நடந்து வருவது சம்பந்தமாக விவரங்களை கேட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story